வண்டிமாடு


கர்த்தனா நான்?
கால்களில் லாடச் சிலுவை
கற்பாதைகளினூடே பயணம்..

சிவனா நான்?
பிடி வைக்கோலுக்காகப்
பாரம் சுமக்கிறேன்.
பிரம்படிகள் மேனியெங்கும்...

கள்ளிப்பால் சுரக்க கற்றிருந்திருக்கலாம்,
எனைப் பெற்றவுடன் கோமாதா...

காத்திருப்பு


பிரியும் அந்திவேளையில்
அழுது சிவந்திருக்கும்
வானும் சூரியனும்...- எனினும்
மீண்டும் சந்திக்கும் நம்பிக்கையில்
மறைந்துபோகும்..
என்றோ ஒருநாள்
நானும் உனை சந்திப்பேன் மீண்டும்...

அதுவரையிலும்,
மழைக்காய் ஏங்கும்
காகிதக் கப்பல்போல்
காத்துக்கொண்டிருப்பேன்...


வருந்துவதற்கு யாருமில்லை.
புதிதாய் வெள்ளையடித்த சுவற்றில்
மறைந்துபோன குட்டிப் பையனின்
கிறுக்கல்களுக்காக...

அபிஷேகம்



சாலையோர சாமிகளுக்குச்
செலவில்லாமல் அபிஷேகம்..
நல்ல மழை....
என்னதான் இருந்தாலும் அந்த கிராமத்து வாழ்க்கைக்கு ஈடாகாது..
அதிகாலை சேவல் சத்தம்.. கோலமிட்ட ஓவியத் தெருக்கள்... சாணம் மெழுகிய சில்லென்ற வீட்டுத்தரைகள்... இன்னும் எத்தனையோ சொல்லிக்கொண்டே போகலாம்.... நகரத்தின் நசுக்கலில் அடிக்கடி வந்துபோகும் நினைவுகள்...

இதோ அந்த நினைவுகளின் தாக்கத்தில் உதிர்ந்த கவிதையொன்று..

புழுதி படிந்த கோலிக் குண்டுகள்..
தெருவெலாம் உருண்ட நுங்கு வண்டி...
வளைந்துபோன சைக்கிள் டயர்.
ஆக்கைபட்ட பம்பரங்கள்.
கடந்துவந்த பால்யத்தின் சாட்சிகள்.
காத்துக்கொண்டிருக்கின்றன,
கிராமத்து வீட்டுப் பரணில்..
கான்வென்டில் படிக்கும்
பேரனின் வருகைக்காக...

முள்ளாய்க் குத்தியது
புதிய ஷூ..
அப்பாவின் கால்களில்
கிழிந்த செருப்பு....


அளவுக்கு அதிகமாய்
மைபூசி வந்தது
அமாவாசை நிலா...
கல் எறிந்திடாதீர்கள்
மழைநீரில்...- மலர்கள்
முகம் பார்த்துக்கொண்டிருக்கின்றன....

புல்லாங்குழல்

ஏழு கண்கள்
இருந்தென்ன??
பேசமட்டும் செய்கிறது..

நீர்க்குமிழ்

சின்ன தீண்டலில்
உடைந்துபோனது
வானவில்...